
கோலாலம்பூர், 19 பிப்ரவரி — கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) துப்பாக்கிச்சூடு நடத்திய ஹபிழுல் ஹவாரி (38) ஏழு குற்றச்சாட்டுகளை இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த ஹபிழுல், இன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுல்கிப்லி அப்துல்லா முன்னிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
ஹபிழுல் மீது Glock 19 துப்பாக்கி, 33 தோட்டாக்கள், பட்டாசு, மற்றவர்களுக்கு சொந்தமான மூன்று அடையாள அட்டைகள் வைத்திருந்தது மற்றும் போலியான வாகன எண்ணுடன் காரை ஓட்டியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றங்கள் துப்பாக்கி சட்டம், ஆயுதங்கள் சட்டம், வெடிபொருள் சட்டம், தேசிய பதிவுத்துறை விதிகள் மற்றும் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஹபிழுலுக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 6 தேள் அடிகள் விதிக்கப்படலாம். மேலும், தவறான அடையாள அட்டைகளை வைத்திருந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை அல்லது RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
2024 ஏப்ரல் 15ஆம் தேதி, கோட்டா பாருவில் உள்ள KPJ பெர்டானா மருத்துவமனையில் ஹபிழுல் இந்த குற்றங்களைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான தீர்ப்பு பிப்ரவரி 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இதற்குப் பிறகு, ஏப்ரல் 14, 2024 அன்று KLIA-வில் தனது மனைவி பாரா மட் இஸா (38) மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக அவர் மீது தனி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
-யாழினி வீரா