
பத்துமலை, 26 ஜனவரி — கெனிசன் பிரதர்ஸ் ஸ்ரீ மகா முனிஸ்வரர் ஆலய வளாகத்தில் பொங்கல் விழா கலை கலாச்சாரத்தோடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மக்கள் கலைஞர் கவிமாறன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
சுங்கை துவாவில் நடந்த இப்பொங்கல் விழா நிகழ்வில் இதுகுறித்து பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் “மேல்குகைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு தேவஸ்தானம் முறையாக அனுமதி கோரியுள்ளது. அனைத்து தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் விரைவில் முழு அனுமதி வழங்கப்படும். நான் இந்த திட்டத்திற்கு முழுமையான ஆதரவு தருவேன்,” என தெரிவித்தார்.
இந்த மின் படிக்கட்டு திட்டத்திற்கான பூமி பூஜை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார், பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு மேல்குகைக்கு செல்ல தகுதியற்றவர்களுக்கு உதவவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த மின் படிக்கட்டு திட்டம், அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், பக்தர்களுக்கு கூடுதல் வசதியாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.
– வீரா இளங்கோவன்