
கோலாலம்பூர், 21 பிப்ரவரி — பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று அதிகாலை 5 மணி அளவில் பஹ்ரைனிலிருந்து நாடு திரும்பியவுடன் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.
அவர் முகநூல் பதிவில், பஹ்ரைன் மற்றும் ப்ரூனையில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்தார்.
“பஹ்ரைனில் இருந்து திரும்பியவுடன் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினேன். என் பயணம் பஹ்ரைன் மற்றும் ப்ரூனையுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் உதவியதாக கருதுகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.
பிரதமர், பஹ்ரைன் இளவரசர் மற்றும் பிரதமர் சல்மான் ஹமத் அல் கலிஃபாவின் அழைப்பின்பேரில் அங்கு பயணம் மேற்கொண்டார்.
அந்த வருகையின் போது, இஸ்லாமிய உலக அறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற “இன்ட்ரா-இஸ்லாமிக் டயலாக்” (IIDC) மாநாட்டில் சிறப்பு உரையாற்றிய முதல் அரசு தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
ப்ரூனையில், சுல்தான் ஹசனல் பொல்கியாவை சந்தித்த பிரதமர், மியான்மர் பிரச்சனை, தென்சீனக்கடல் மோதல் மற்றும் ASEAN வர்த்தக உறவுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதில், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா உட்பட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
அன்வார், ASEAN 2025 தலைமைப்பொறுப்பில் ப்ரூனை சுல்தானின் அனுபவம் மற்றும் ஆலோசனை முக்கியமானது என தெரிவித்தார்.
-யாழினி வீரா