
கோலாலம்பூர், 7 நவ. – சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வரும் “பாடகர் டத்தோ டேவிட் ஆறுமுகம் மருத்துவமனையில் உயிர் பிழைப்புக்காக போராடி வருகிறார்” என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என மலேசிய கலைஞர் சங்கத் தலைவர் டத்தோ ஃப்ரெடி பெர்னாண்டஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, டேவிட் ஆறுமுகம் தற்போது நல்ல ஆரோக்கியத்தில் உள்ளார் மேலும் வழக்கம்போல “அல்லிகேட்ஸ்” குழுவுடன் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். எந்தவிதமான மருத்துவ பிரச்சினையும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பொய்ச் செய்தியின் தாக்கம் கலை உலகுக்கு தீங்காக முடியும் என்பதால், கரியாவன் (Karyawan) அமைப்பு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபத்ஸிலுக்கு கடிதம் அனுப்பி, தவறான தகவலை பரப்பிய யூடியூப் சேனலுக்கு எதிராக மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளது.
அமைப்பு தெரிவித்ததாவது, இத்தகைய பொய்ச் செய்திகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி, டேவிட் ஆறுமுகம் மற்றும் அலிகேட்ஸ் குழுவை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில் தயக்கம் உருவாக்கக்கூடும் என கவலை தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா


