
சென்னை, 20 பிப்ரவரி — சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திரைப்பட நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 2011ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு அவர் அந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார். இதனால், வழக்கு முடிவுக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், விஜயலட்சுமியின் சார்பில், மறு விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
வழக்கு விசாரணையில், விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தது தூண்டுதலின் பேரில் நடந்தது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன்பு புகார் திரும்பப் பெற்றதாக இருந்தாலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை நடத்துவதற்கான அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதாகக் கூறினார்.
அதனால், வழக்கை சர்வ சாதாரணமாக முடிக்க இயலாது என்பதால், சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், மேலும், இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் சென்னை காவல்துறை விசாரணை செய்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-யாழினி வீரா