Tazhal Media – தழல் மீடியா

/ May 02, 2025
Latest News
tms

‘டிக்கெட் கவலை இல்லா’ ரயில் சேவை-நெரிசலுக்குப் பின் மகா கும்பமேளா ஏற்பாடு நிலவரம் என்ன?

படம் : கூகுள்

புதுடெல்லி, 29 ஜனவரி- பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியானதை அடுத்து, இந்திய ரயில்வே சார்பில் காலி ரயில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணச்சீட்டுகள் பெறுவது கட்டாயமாக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று மவுனி அமாவாசை என்பதால், அங்கு நடைபெற்ற ராஜகுளியலில் பங்கேற்க கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1.00 முதல் 2.00 மணி வரையிலான நேரத்தில் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் ராஜகுளியலை முடித்த பக்தர்கள் உடனடியாக வீடு திரும்புவது அவசியமாகிறது. இவர்கள் வீடு திரும்ப தாமதமானால் மேலும், சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், தாங்கள் முன்பதிவு செய்த ரயில்களுக்காக அதன் ரயில் நிலையங்களில் காத்திருப்பதும் நெரிசலுக்கு வழிவகுத்து விடும். இதன் காரணமாக, ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்து அதை தாமதிக்காமல் அமலாக்கவும் துவங்கிவிட்டது.

இந்நிலையில், உபி காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, வான்வெளியில் ஹெலிகாப்டர்களில் பறந்து நெரிசல் உருவாகும் இடங்கள் கண்டறியப்படுகின்றன.

உ.பி அரசின் புள்ளிவிவரத்தின்படி இன்று மவுனி அமாவாசைக்காக மதியம் வரை 3.96 கோடி பேர் புனிதக்குளியல் நடத்தி உள்ளனர். இவர்களில் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தின் கரைகளில் கல்பவாசம் செய்யும் சுமார் 10 லட்சம் பேரும் அடங்குவர். ஜனவரி 13 முதல் கணக்கிட்டால் இதுவரை மகா கும்பமேளாவில் 19.98 கோடி பேர் புனிதக்குளியலை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top