
பத்துமலை, 11 பிப்ரவரி — பத்துமலையில் வருடந்தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூச விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பக்தர்களின் பெருமழை என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட வெள்ளி ரதம், 22 மணி நேரம் பயணித்ததன் பின்பு பத்துமலையை வந்தடைந்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டு இரவு 7 மணிக்கே வெள்ளி ரத ஊர்வலம் தொடங்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளிரத ஊர்வலத்தில் பங்கேற்றனர். தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த பத்துமலையில் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மில்லியன் கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, பக்தர்கள் ஏந்தும் காவடிகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆன்மிக நிகழ்வுகளைக் காண, வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலைக்கு வந்துள்ளனர். இதுவே பத்துமலை தைப்பூச திருவிழாவின் வெற்றியின் அடையாளம் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
தற்போது உள்ள பக்தர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் தொடர்ந்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார்.
-வீரா இளங்கோவன்