
ஈப்போ, 11 ஜூன் : பேராக் மாநிலத்தின் கிரிக் பகுதியில் உள்ள தமன் புலாய் சவானா நீர்வழங்கல் நிலையம் அருகே, ஜூன் 6ஆம் தேதி சாலையோரம் கைவிடப்பட்ட ஒரு ஹோண்டா HRV வகை SUV காரில் போலீசார் நடத்திய சோதனையில், ரி.ம.46,67,850 மதிப்புள்ள 123.2 கிலோ மெத்தாம்பட்டமின் மற்றும் கெட்டமின் போதைமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
பேராக் போலீஸ் தலைவர் நோர் ஹிஸாம் நொர்டின் இன்று மாநிலக் காவல் தலைமையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பொதுமக்களின் புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, 82.8 கிலோ மெத்தாம்பட்டமின் மற்றும் 40.4 கிலோ கெட்டமின் இருந்த 119 தெளிவான பிளாஸ்டிக் பைகளை கண்டுபிடித்தோம். இது இவ்வாண்டில் பேராக் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய போதைப்பொருள் தொகைகளில் ஒன்றாகும்” என்றார்.
அத்துடன், குறித்த காரின் இயக்குனர் அல்லது பயணிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும், காரின் என்ஜின் எண் அடிப்படையில் அது கிளோன் வாகனம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் உள்ளூர் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும், சுமார் 3.5 லட்சம் போதைப்பொருள் அடிமைகள் இதன் மூலம் பாதிக்கப்படக் கூடிய நிலை இருந்தது என்றும் கூறினார்.
இச்சம்பவம் அபாயகரமான போதைப்பொருட்கள் சட்டம் 1952 இன் பிரிவு 39B கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
-யாழினி வீரா



