
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் அலிபாபா, தனது புதிய ஏ.ஐ. மாடல் Qwen 2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல், தற்போதைய முன்னணி ஏ.ஐ. மாடல்களான GPT-4o (OpenAI), Llama (Meta) மற்றும் DeepSeek AI மாடல்களை விட மேம்பட்ட செயல்திறன் கொண்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.
அலிபாபா கிளவுட் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “Qwen 2.5 Max மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஆகியவற்றை விட சிறப்பாக செயல்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஏ.ஐ. தளத்தில் DeepSeek AI நிறுவனத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஜனவரி 20-ம் தேதி தனது R1 ஏ.ஐ. மாடல்-ஐ வெளியிட்டது. இதன் தாக்கத்தால், சிலிகான் வேலியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. குறுகிய காலத்திலேயே, DeepSeek நிறுவனத்தின் ஏ.ஐ. மாடல் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
இதனிடையே, DeepSeek R1 மாடலுக்கு நேரடி போட்டியாக, அலிபாபாவின் Qwen 2.5 Max அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொழில்நுட்ப வல்லுநர்கள் முக்கியமாய் கவனிக்கின்றனர். இந்த புதிய மாடல், GPT-4o மற்றும் Llama போன்ற முன்னணி மாடல்களைவிட மேம்பட்ட செயல்திறன் கொண்டதாக இருப்பதை அலிபாபா வலியுறுத்தியுள்ளது.
ஏ.ஐ. மாடல்கள் இடையே போட்டி தீவிரமாக நீடிக்கும் நிலையில், Qwen 2.5 Max, DeepSeek R1, GPT-4o போன்ற மாடல்கள் எந்த அளவுக்கு செயல் திறனை நிரூபிக்கப் போகின்றன என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
–யாழினி வீரா