
கோலாலம்பூர், பிப். 18 – 14-ஆவது உலகத் தாய்மொழி தினம் இந்த ஆண்டு மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM) தலைமையில், தமிழ் அறவாரியம் (TFM), LLG, மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JAOS), மற்றும் மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (Dong Zong) ஆகிய அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் சுப்பிரமணியம், அனைத்து பள்ளிகளிலும் உலகத் தாய்மொழி தினத்தை கல்வியமைச்சு அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், உலகத் தாய்மொழி தினம் கல்வியமைச்சின் அதிகாரப்பூர்வ விழாக்களில் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் தாய்மொழியைக் காக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வு விவரங்கள்
இடம்: கோலாலம்பூர் & சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம் (KLSCAH)
- அறிமுக விழா – 21 பிப்ரவரி 2025 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 – மதியம் 12.30
- கண்காட்சி & பரிசளிப்பு விழா – 14 ஜூன் 2025 (சனிக்கிழமை) காலை 8.00 – பிற்பகல் 2.00
இந்த ஆண்டு, தேசிய துணை ஒற்றுமை அமைச்சர் மாண்புமிகு சரசுவதி கந்தசாமி பிப்ரவரி 21 அன்று நடைபெறும் அறிமுக விழாவில் கலந்துகொண்டு 2025-ஆம் ஆண்டு உலகத் தாய்மொழி தினத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.
பள்ளிகள் மற்றும் மாணவர் பங்கேற்பு
பள்ளிகள் கவிதை, நாடகம், Choral Speaking, மற்றும் உலகத் தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம் பற்றிய சொற்பொழிவுகளை நடத்தலாம். சீன, மலாய், தமிழ் மற்றும் மூலநாடார் பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். சிறந்த 10 மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அறிமுக விழாவிற்கு 150 பேர், கண்காட்சி விழாவிற்கு 500 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் அறவாரியம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்றும், இந்த விழாவில் அனைவரும் இணைந்து சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
-யாழினி வீரா