
வத்திகன், 26 ஏப்ரல் – மறைந்த போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கிற்கான கடைசி ஏற்பாடுகள் வத்திகனில் வெள்ளிக்கிழமை முழு வீரியத்துடன் நடைபெற்று வருகின்றன. செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அவரது நல்லுடல் திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சடங்கில் 50 நாட்டுத் தலைவர்களும், 10 மன்னர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரைன் தலைவர் ஸெலென்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சிங்கப்பூர் சார்பில் அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் பங்கேற்கவுள்ளார்.
வத்திகனையும், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன. இறுதிச்சடங்கு முடிந்ததும், போப்பின் நல்லுடல் அவரது விருப்பமான சென்டா மரியா மஜியோரே தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும்.
பொதுமக்கள் ஏப்ரல் 27 முதல் அவரது கல்லறையை பார்வையிடலாம். அதன்பிறகு புதிய போப்பை தேர்வு செய்யும் செயல்முறை தொடங்கும். தற்போது 135 கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதியுள்ளவர்கள்.
-யாழினி