
கோலாலம்பூர், 7 அக். – சர்வதேச சைக்கிள் சங்கம் (UCI), மலேசியாவின் பிரபலமான சைக்கிள் பந்தயம் Le Tour de Langkawi (LTdL) க்கு 2026 முதல் 2028 வரை “ProSeries” அந்தஸ்தைத் தொடர்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
UCI வழங்கும் இந்த நீட்டிப்பு, மலேசியா சைக்கிள் விளையாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற LTdL பந்தயங்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப தரநிலைகளிலும், ஒழுங்கமைப்பிலும் உயர்ந்த மதிப்பீடு பெற்றுள்ளன.
UCI உறுப்பினரும் மலேசியா சைக்கிள் சங்கத் தலைவருமான தத்தோ அமர்ஜித் சிங் தெரிவித்ததாவது, “LTdL 2025 பதிப்பு அனைத்துத் தொழில்நுட்ப அளவுகோள்களிலும் சிறப்பாக மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில்தான் UCI இந்தப் பெருமையைத் தொடர முடிவு செய்துள்ளது,” எனக் கூறினார்.
அவர் மேலும், “Le Tour de Langkawi என்பது வெறும் ஒரு சைக்கிள் பந்தயம் மட்டுமல்ல, மலேசியாவை உலக சைக்கிள் வரைபடத்தில் பிரகாசமாக காட்டும் ஒரு அடையாளம்” என வலியுறுத்தினார்.
எனினும், 2026 ஆம் ஆண்டுக்கான ஏற்பாட்டு பொறுப்பு எந்த நிறுவனம் அல்லது அமைப்புக்குக் கிடைக்கும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதற்கான விவாதங்கள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீட்டிப்பு மூலம் மலேசியா சைக்கிள் விளையாட்டு துறையில் புதிய உற்சாகமும், சர்வதேச அளவில் மேலும் வலுவான இடமும் பெறும் என நம்பப்படுகிறது.
–யாழினி வீரா



