
புத்ரா ஜெயா, 23 பிப்ரவரி — மலேசியாவின் வேகமான பொருளாதார முன்னேற்றமும், மக்களின் திறமையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு ஈர்க்கும் முக்கிய காரணங்களாக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மற்ற நாடுகள் கொவிட்-19 பாதிப்பில் இருந்து மீள போராடிக்கொண்டிருக்கும்போது, மலேசியா உறுதியான வளர்ச்சியையும், அதிக முதலீடுகளையும் சாதனைப்படுத்தி வருவதை வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் கவனித்து வருவதாக அவர் கூறினார்.
“நான் நம்புகிறேன், நம்மிடம் அதற்கான திறன் இருக்கிறது. மலேசியா அபூர்வமான ஒரு நாடு. பல்வேறு இன, மத மக்களுடன் அமைதியாக வாழக்கூடிய சமுதாயம் இங்கே இருக்கிறது. சில நாடுகள் ஊழல் விவகாரங்களால் பாதிக்கப்பட்டு சரிந்து போனது. அதற்குப் பிறகு கோவிட்-19 வருகை தந்தது. ஆனால், நாம் மீண்டும் எழுச்சியடைந்து, பொருளாதார வளர்ச்சியுடன், உயர் முதலீடுகளை ஈர்த்து, தரவுத்தளக் கழகங்களும் அரைக்கட்டியல் தொழில் முனையங்களும் உருவாகும் முக்கிய மையமாக மாறி வருகிறோம்,” என்று அவர் இன்று அலமாண்டா பெர்வாஜா பஹாரு நிகழ்வில் உரையாற்றினார்.
மலேசியாவின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் மக்களின் திறமை என்றும், அதனால் தான் வெளிநாட்டு முதலீடுகள் பெருகி வருவதாகவும் பிரதமர் மேலும் கூறினார். இளைஞர்கள், மேலாண்மை குழு, வர்த்தகர்கள், சுத்தம் செய்யும் பணியாளர்கள் என அனைவருக்கும் நமது பாராட்டுகளை செலுத்துகிறோம்,” என்றார்.
மேலும், சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என்றும், ரமலான் காலத்தில் இந்த சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மீண்டும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
– யாழினி வீரா