
சிப்பாங், 31 ஜனவரி — கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 61.3kg மெத்தாம்பேட்டமைன் மற்றும் கஞ்சா வகையான போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் மதிப்பு RM1.06 மில்லியன் எனக் கணிக்கப்படுகிறது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறுகையில், முதல் சம்பவம் ஜனவரி 22-ம் தேதி KLIA Terminal 2-ல் நடந்ததாகவும், சரவாக்கைச் சேர்ந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அவர்களின் பயணப்பையிலிருந்து 30.3kg மெத்தாம்பேட்டமைன் வகை போதைப்பொருள் அடங்கிய 30 பிளாஸ்டிக் பொதிகள் கைப்பற்றப்பட்டன. இந்த இருவரும் மலேசிய தீபகற்பத்திற்கு முதல் முறையாக வருகை தந்தவர்கள் என்றும், மோசடி கும்பலின் சார்பில் இந்த போதைப்பொருள்களை சரவாக்கின் மிரி பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர் என்றும் கூறினார். அவர்களுக்கு ஒரு கிலோ மெத்தாம்பேட்டமைனுக்கு RM600 சம்பளமாக வழங்கப்பட்டது.
இரண்டாவது சம்பவம் ஜனவரி 24-ம் தேதி KLIA Terminal 1-ல் நடந்தது. இதில் 36 வயது பிரிட்டிஷ் நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 31kg கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. “இந்த சந்தேகநபர் லண்டனில் இருந்து ஜனவரி 16-ம் தேதி மலேசியாவில் நுழைந்த பாதுகாப்பு அதிகாரி ஆவார். இந்த போதைப்பொருள்களை மீண்டும் லண்டன் அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தார்,” என்று ஹுசைன் கூறினார்.
மெத்தாம்பேட்டமைன் மதிப்பு RM967,000 ஆகவும், கஞ்சாவின் மதிப்பு RM96,000 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. மூவரும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர்.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணை மேற்கொள்ளபட்டுள்ளது.
-வீரா இளங்கோவன்