
கோலாலம்பூர், 17 நவ. – தேசிய முன்னணி (BN) கூட்டணிக்குள் நீண்டகாலமாக நிலவி வரும் மரியாதையின்மை, மிரட்டல், கருத்து கேட்காத தன்மை ஆகியவை கூட்டணியின் அடிப்படை ஒற்றுமையே சிதைந்துவிட்டதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று கடும் வார்த்தைகளில் சாடினார். மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் பேசும் போது, இப்படியான சூழ்நிலையில் கூட்டணி நீடித்திருக்க முடியும் என்ற கேள்வியே எழுகிறது என்றார்.
தேசத்தின் சுதந்திர காலத்திலிருந்து ஒன்றாக இயங்கிவரும் அம்னோ–மஇகா–மசீச கூட்டணியில் ஒரு கட்சியின் ஆதிக்கம் அதிகரித்து, மற்ற கட்சிகள் முடிவெடுப்பில் புறக்கணிக்கப்பட்டன என்பதை அவர் வெளிப்படையாக விமர்சித்தார். குறிப்பாக, தேசிய முன்னணி ஆட்சியை இழந்தபின் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்தது “கூட்டணியின் முடிவு அல்ல; அம்னோவின் தனிப்பட்ட முடிவு” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அம்னோ எடுத்த அந்த முடிவால், அவர்கள் 70% மலாயக் ஆதரவை இழந்துள்ளனர், இது அவர்களது சொந்த அரசியல் முடிவுகளின் விளைவாகும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தங்கள் கருத்தினை வெளிப்படுத்துவதற்குக் கூட இடமளிக்காத அணுகுமுறை, BN-க்குள் விரக்தியை அதிகரித்ததாக அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், ஆட்சியை இழந்த பிறகு அம்னோ தலைவர்கள் மீது வழக்குகள் தொடங்கிய சூழலிலும், மஇகா அவர்கள் மீது வைத்திருந்த ஆதரவு ஒருபோதும் குறையவில்லை என்பதை நினைவூட்டினார். ஆனால் சமீபத்திய அரசியல் மாற்றங்கள், தோழமை கட்சிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
“எங்களுக்கு இன்று அரசாங்கப் பதவி எதுவும் இல்லை. இருந்தாலும், எங்களின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் நாங்கள் தனித்துப் போராட முடியும். எங்களின் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்,” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்தார்.
– யாழினி வீரா



