
கோலாலம்பூர் 27 மார்ச் : அரசு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஏப்ரல் 21 முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தங்கள் பள்ளி உடையில் ஜாலூர் கெமிலாங்க் குறியீட்டை அணிய வேண்டும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.
திங்கள் கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், கல்வித் துறை பொதுநிர்வாக இயக்குநர் அச்மான் அட்னான், 5cm x 2cm அளவுள்ள இந்த பிளாஸ்டிக் குறியீட்டை மாணவர்கள் தங்களது வலது மார்புப் பகுதியில் அணிய வேண்டும் என குறிப்பிட்டார். இந்த விதி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மேற்படிப்பு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி மையங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேலும், பிற கல்வி நிறுவனங்களும் இதைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்த புதிய நடைமுறையின் நோக்கம் தேசப்பற்றை வளர்த்தல், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்துவதாகும். மாணவர்கள் குறியீட்டை அணிவதன் மூலம் நாட்டின்மீது அன்பும் ஒழுக்கமும் அதிகரிக்கும் என கல்வி அமைச்சகம் நம்புகிறது.
அத்துடன், மாநில மற்றும் மாவட்ட கல்வி துறைகள், தேசிய மதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழினி வீரா