
கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசிய ஊடகக் கவுன்சில் (MMC) மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் ஊடகங்கள் தங்களின் பணிகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாசில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்த மசோதாவில் உள்ள சுய ஒழுங்குமுறை (self-regulation) ஊடக துறையின் சுயாதீனத்தைக் காட்டுவதோடு, மக்களின் உரையாற்றும் உரிமை குறைக்கப்படவில்லை என்பதற்கான அடையாளமாகும். “இந்தக் கவுன்சில் அமைக்கப்படுவதால் ஊடகங்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அவற்றை ஊடகங்களே தாங்களாகவே நிர்வகிக்கலாம்,” என்று அவர் நேற்று லெம்பா பந்தாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார்.
மேலும், இது தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்தவும் உதவும் எனவும் அவர் கூறினார். “நல்ல பத்திரிகை தரம் என்பது சரியான பத்திரிகை ஒழுங்குகளைப் பின்பற்றுவதில் தொடங்குகிறது. இதை அரசு கட்டாயமாக விதித்தால், அது கட்டுப்பாடாக இருக்கும். ஆனால் ஊடகத் துறைதான் தன் தரத்தைக் குறிக்கையில், அது நீடித்ததாகவும் ஊடக சுதந்திரத்திற்கு நல்லதாகவும் இருக்கும்,” என்றார்.
மேலும், ஃபாஹ்மி இந்த மசோதா நிறைவேறியதன் பிறகு, அது தொடர்பான பல விவகாரங்களை தேசிய பத்திரிகையாளர்கள் தினம் (HAWANA) விழாவில் அறிவிப்பதாக தெரிவித்தார். “உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் தற்போது சந்திக்கும் முக்கிய சவால்கள் நிதிநிலை தொடர்பானவை. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சில முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கான அறிவிப்புகளை HAWANA விழாவில் வெளியிட உள்ளேன்,” என அவர் கூறினார்.
இந்த மசோதா ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவும், சமூகத்திற்கு நம்பகமான தகவல்களை வழங்கவும் உதவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
-யாழினி வீரா