
கோலாலம்பூர், 29 மார்ச் : ஆர்.டி.எம் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் முன்னாள் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் எம். சுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
வயோதிகத்தால் உடல் நலிவுற்ற அவர், நேற்று முன்தினம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
கெடா மாநிலத்தின் புக்கிட் ஜூனுவைச் சேர்ந்த சுப்ரமணியம், 1966 ஆம் ஆண்டு ஆர்.டி.எம் வானொலியின் இந்தியப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் மலாக்கா வட்டார ஒலிபரப்புக்கு மாற்றப்பட்டு, அங்கு மாதம் ஒரு நாடகம் மற்றும் கலாப் பாட்டியங்களை தயாரித்து அனுப்பும் பொறுப்பில் இருந்தார். அதோடு, உள்ளூர் வட்டார நிகழ்ச்சிகளை உருவாக்கும் முக்கிய பணியையும் மேற்கொண்டார்.
மலாக்காவில் உள்ளூர் கலைஞர்களின் பாடல்கள், வாத்திய இசை, நேர்காணல்கள், வட்டாரச் செய்தி தொகுப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து, பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.
1975 ஆம் ஆண்டு அங்காசபுரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சுப்ரமணியம், அங்கு அறிவிப்பாளராகவும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் பொறுப்பேற்றார். பின்னர் நாடகப் பிரிவிலும் பணியாற்றிய அவர், 1997 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் முன் தரமான நாடகங்களை உருவாக்கியும், பல திறமையான கலைஞர்களை வளர்த்தும் வந்தார்.
அன்னாரின் மறைவு மலேசிய ஊடக உலகத்திற்கு பேரிழப்பாகும். அவரது உடல், Jalan Dutamas Seroja 4, Taman Segambut SPPK, 51200 Kuala Lumpur எனும் முகவரியில் வைக்கப்பட்டு, நாளை நண்பகல் 12 மணிக்குள் செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்படும்.
-யாழினி வீரா