
கோலாலம்பூர், 9 செப்டெம்பர்:- சிகரெட், புகையிலை மற்றும் சுருட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 நிறுவனங்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) Op Sikaro நடவடிக்கையின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் இறக்குமதி உரிமம் பெற்றிருந்தாலும், உண்மையான வரி செலுத்துவதைத் தவிர்க்க சுங்கக் குறியீடுகள் மற்றும் பொருள் விவரங்களை மாற்றும் போலி அறிவிப்புகள் செய்யப்பட்டதாக ஆரம்பக் கணக்கில் தெரியவந்துள்ளது.
எம்ஏசிசி சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முகமது ஜம்ரி ஜைனுல் அபிடின் தெரிவித்ததாவது, விசாரணையில் சில கப்பல் முகவர்கள் மற்றும் அனுப்பும் முகவர்களும் தங்கள் உரிமைகள் இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோத இறக்குமதியை எளிதாக்கியதாக நம்பப்படுகிறது.
அத்துடன், சுருட்டு, புகையிலை, சிகரெட் மட்டுமல்லாமல், மதுபானங்களும் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இவை தனியார் கிடங்குகளில் மறைத்து வைத்து பின் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த செயல்பாடுகள் 2020 முதல் 2024 வரையிலான காலத்தில், அரசுக்கு குறைந்தது RM250 மில்லியன் வரி இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என எம்ஏசிசி மதிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக, சுமார் RM218 மில்லியன் மதிப்புள்ள தனிநபர் மற்றும் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், பல இறக்குமதி உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
SPRM, இந்த வழக்கை 2009 ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 16 மற்றும் 2001 AMLATFPUAA சட்டம் கீழ் விசாரித்து வருகிறது.
-யாழினி வீரா



