
கோலாலம்பூர், 5 மார்ச் — மலேசிய இந்தியர் கலைஞர்கள் அறவாரியம் (யாசி) ஏற்பாட்டில், மிகப்பெரிய கலைக்கோர் விருதளிப்பு விழா வரும் மே 31 ஆம் தேதி செந்தூல் High Convention மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மொத்தம் 35 கலைஞர்களுக்கு பல்வேறு கலைத் துறைகளில் அவர்களின் சிறப்பான பங்களிப்பிற்காக விருதுகள் வழங்கப்படும் என்று யாசி தலைவர் டத்தோ வி.கே.கே. தியாகராஜன் தெரிவித்தார். மலேசியாவில் இந்திய கலைஞர்களின் திறமைகளை பரிசீலித்து, அவர்களை அங்கீகரித்து விருதளிப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விருதளிப்பு விழா ம இகா தேசிய துணை தலைவர், யாசி அறங்காவலர் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் முழு ஒத்துழைப்புடன் மிகுந்த விமரிசையாக நடத்தப்படும் என டத்தோ வி.கே.கே. தியாகராஜன் உறுதிப்படுத்தினார்.

மேலும், 30-க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்களை இந்த விழாவில் சிறப்பாக கௌரவிக்கப்படுவார்கள். யாரும் கவனிக்கப்படாமல் போகமாட்டார்கள் என டத்தோஸ்ரீ எம். சரவணன் உறுதியாக தெரிவித்தார். மலேசிய இந்தியர் கலைஞர்கள் அறவாரியம் 1999 ஆம் ஆண்டு மறைந்த துன் டாக்டர் சாமிவேலு அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, மலேசிய இந்திய கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் யாசி செயலாளர் சங்கமம் சுப்ரா, அறங்காவலர் நாகராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலைஞர் இராமச்சந்திரன், பிரான்சிஸ் செல்வன், சந்திரா சூரியா, ம இகா ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-யாழினி வீரா