
அலோர் ஸ்டார், மார்ச் 3 – நேற்று காலை தாயை எரித்து கொன்றதாக நம்பப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோத்தா செத்தார் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையாளர் (ACP) சிதி நூர் சலவாதி வெளியிட்ட அறிவிப்பில், சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் (OKU) என்பதும், அவர் தனது வீட்டின் முன் கைது செய்யப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தாயின் உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் வீட்டிற்குள் காணப்பட்டது.
“முதல்கட்ட பரிசோதனையில், சம்பவம் காலை 7.00 முதல் 7.30 மணிக்குள் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. சந்தேகநபரின் 14 வயது மகன் தன் பாட்டிக்கும் (சம்பவத்திற்குள்ளானவர்) தந்தைக்கும் (சந்தேகநபர்) இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறியுள்ளார்.
“திடீரென, பாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கத்திய சத்தத்தைக் கேட்டவுடன், அந்த சிறுவன் உடனே வெளியேறி, அருகில் இருந்த அண்டை வீட்டாரிடம் உதவி கோரியுள்ளார்.
“அண்டை வீட்டார் சம்பவம் நடந்ததைக் காண முயன்றபோதும், சந்தேகநபர் அவர்களை மிரட்டியதால், உடனே போலீசாருக்கு தகவல் அளிக்க நேரிட்டது.
“சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்தேகநபரை கைது செய்தனர்,” என்று ACP சிதி நூர் சலவாதி தெரிவித்தார்.
மகனால் கொல்லப்பட்ட அந்த 68 வயதான பெண்மணியின் உடல், அலோர் ஸ்டார் சுல்தானா பகியா மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
-யாழினி வீரா