
ஜோகூர் பாரு, 17 ஜூன் : வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட போலி ஷேர் முதலீட்டு திட்டத்தால், 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஒருவர் RM1.77 மில்லியன் இழந்துள்ளார்.
ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமாரின் விளக்கமின்படி, தனியார் நிறுவன மேலாளர் ஒருவரின் தொலைபேசி எண், ‘C-10 Freeman Saham 17’ எனும் வாட்ஸ்அப் குழுவில் கடந்த ஏப்ரலில் சேர்க்கப்பட்டது.
இந்த குழுவில், பங்கு சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, தினசரி 5%-10% வரையிலான லாபம் தரப்படும் என கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால் கவரப்பட்ட பாதிக்கப்பட்டவர், ஏப்ரல் 16 முதல் மே 30 வரையில் 12 முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். மொத்தம் RM1,772,603 ஐ ஐந்து வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், வாக்குறுதியின்படி எந்த வருமானமும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக, மேலும் RM500,000 பணம் செலுத்துமாறு கூறப்பட்டதால் சந்தேகமடைந்த அவர், தாம் மோசடிக்கு உள்ளாகிவிட்டதாக நம்பியுள்ளார்.
இந்த வழக்கு செக்ஷன் 420 கீழ் விசாரணை நடைபெறுகிறது.
அத்துடன், சமூக ஊடகங்களில் வரும் அதிநிலை லாபம் தரும் முதலீட்டு சலுகைகளுக்கு ஏமாறாதீர்கள் என போலீஸ் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கி கணக்கு எண்கள், தொலைபேசி எண்களை SEMAK MULE சேவையின் மூலம் சரிபார்க்கவும், சம்பந்தப்பட்ட முதலீட்டு தகவல்களை போலிஸ், பெங்க் நெகாரா, அல்லது செக்யூரிட்டி கமிஷன் மூலம் உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-யாழினி வீரா



