Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை தூண்டும் ‘BUDI95’ திட்டம்

படம்: ஊடகம்

கோலாலம்பூர், 25 செப். – ‘புதிய மதானி RON95’ (BUDI95) திட்டம் மலேசியாவில் சாலை பாதுகாப்பு குறித்து பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு இந்த முயற்சி நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

சாலை பாதுகாப்பு ஆர்வலர் ஷாரிம் தாம்ரின் தெரிவித்ததாவது, தற்போது 2.3 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் செயலில் இல்லாமல் உள்ளன என்பது JPJ தரவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் உரிமம் பெறாமல், அல்லது காலாவதியான உரிமத்தை புதுப்பிக்காமல் வாகனங்களை இயக்குகின்றனர்.

அவர் மேலும் கூறியதாவது, வாகனம் வாங்குவதற்கு உரிமம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு இல்லாததால், பலர் எளிதில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வாங்குகின்றனர். அதேசமயம் சாலைவரி மற்றும் காப்பீடு புதுப்பிக்காமை பிரச்சினையை மோசமாக்கி வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

BUDI95 நடைமுறைக்கு வந்தால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் கட்டாயம் மீண்டும் ஓட்டுநர் தேர்வை எழுத வேண்டிய நிலை வரும். மேலும், எதிர்காலத்தில் அரசு வாகனம் வாங்க உரிமம் அவசியம் என்பதைக் கொண்ட சட்டத்தை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் சமீபத்தில், RON95 எரிபொருள் விலையை லிட்டருக்கு RM2.05 இல் இருந்து RM1.99 ஆகக் குறைப்பதாக அறிவித்தார். இதன் கீழ், BUDI95 திட்டம் 27 செப். அன்று பாதுகாப்பு படையினருக்கு, 28 செப். அன்று STR பெறுநர்களுக்கு, 30 செப். முதல் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் படிப்படியாக வழங்கப்படும்.

இந்த முயற்சி, உரிமையற்ற ஓட்டுநர்களை கட்டாயம் சட்டப்படி செல்லுபடியாகும் உரிமத்தைப் பெறத் தூண்டும் என்று நம்பப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top