
கோலாலம்பூர் 11 ஜூன் : லெம்பா கிள்ளான் பகுதியில் கட்டியெழுப்பப்பட்ட நெடுஞ்சாலை திட்டத்துக்கான சொகுக் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், “தான் ஸ்ரீ” பட்டம் பெற்ற ஒரு முக்கிய நபர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) இன்று விசாரணை மேற்கொண்டது.
SPRM-இன் இரண்டு விசாரணை அதிகாரிகள், குறித்த நபரின் கோலாலம்பூரில் உள்ள இல்லத்தில் நேரில் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், மலாக்கா மாநிலத்தில் உள்ள அவரது இன்னொரு இல்லத்திலும் SPRM சோதனை நடத்தியது. இருப்பினும், அங்கிருந்து எந்தவிதமான பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இந்நபர், உடல்நல சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதும், SPRM விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னதாக, SPRM கையடக்கப்பைகள், நகைகள், பிரமாண்ட வாகனங்கள், அதிநவீன மணிக்கடிகாரங்கள், பணம் மற்றும் பிரமாண்ட வீடுகள் என சுமார் RM32 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை சோதனை செய்த நிலையில் அவற்றை பறிமுதல் செய்திருந்தது. இவை அனைத்தும் குறித்த ‘தான் ஸ்ரீ’யின் சொத்துகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
SPRM தொடர்ந்து வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.
-யாழினி வீரா



