
படம் : கூகுள்
31 ஜனவரி – சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் வரவால் தொழில்நுட்ப துறை ஆட்டம் கண்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு துறையில், தான் தான் நம்பர் ஒன் என்று கருதும் அமெரிக்காவின் இறுமாப்புக்கு சவால் விட தொடங்கி விட்டது.
“டீப்சீக்-ஆர் என்பது ஏஐ துறையின் ஸ்புட்னிக்” என்று மார்க் ஆன்றீசென் என்ற தொழில் முதலீட்டாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு இடையே போட்டியைத் தூண்டிவிட்ட, ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை அவர் குறிப்பிடுகிறார்.
வார இறுதியில் ஆப்பிளின் அமெரிக்க ஆப் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி டீப் சீக். திங்கட்கிழமைக்குள் இந்த செயலி, தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்காவின் முன்னிலை குறித்த பயம் எழுந்ததன் காரணமாக பல அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
வால் ஸ்ட்ரீட்டின் ( உலக பங்கு சந்தைகளின் தலைமையிடமாக கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமைந்திருக்கும் பகுதி) செல்லப்பிள்ளையாக இருந்த செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிக்கும் நிறுவனமாக நிவிடியாவின் பங்குகள் திங்கட்கிழமை சந்தை மூடிய போது 17% குறைந்திருந்தது. அதாவது 600 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பை சந்தித்துள்ளது என்விடியா. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் படி, அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் இதுவே மிகப் பெரிய சரிவாகும்.
-ஶ்ரீஷா கங்காதரன்