
ஜோகூர் பாரு, ஜூன் 24 – இன்றைய டிஜிட்டல் மீடியா கிளப் ஏற்பாட்டில் ஜோகூர் பாருவில் நடைபெற்ற கருத்தரங்கில், மாசாய் இந்தியர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் தொழிலதிபரான டத்தோ கே. புருஷோத்தமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் ஊடகத் துறையின் தற்போதைய நிலைமை, எதிர்கால முன்னேற்றங்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு குறித்த பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியின் முக்கிய உரையாற்றலாளராக மேடையை பகிர்ந்த டத்தோ புருஷோத்தமன், “ஊடகம் என்பது கடலைப்போன்று பரந்தது, அதில் பயணிக்கிறவர் ஒவ்வொருவரும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள கடின உழைப்பும் புதுமையும் தேவைப்படுகிறது” எனத் தெளிவாகக் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: “இளைஞர்கள் இன்று சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கின்றனர். ஆனால் அந்த ஆற்றலை கட்டமைக்கப்பட்ட ஊடக துறைக்கு கொண்டு வரவேண்டும். நேர்மையும் நுட்பமுமாக ஊடக உலகத்தில் பயணிக்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.”மேலும், “ஊடகம் எப்பொழுதோ தொடங்கப்பட்ட ஒரு துறை. ஆனால் இன்று அது முழுமையாக டிஜிட்டல் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கேற்ப நாமும் நம் திறன்களையும், செயல்முறைகளையும் புதுப்பிக்க வேண்டும். இன்றைய ஊடகச் சூழ்நிலையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தனி துறைகளில் நிபுணத்துவம் வளர்க்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊடகதுறையினரும், பல்வேறு சமூகக் குழுக்களும், நிகழ்வை ஊக்கமளிக்கும் வகையில் வரவேற்றனர். இத்தகைய கருத்தரங்குகள் இளைஞர்களை ஊடகத்துறையில் ஈடுபட ஊக்குவிக்கக்கூடியவையாக இருப்பதாகவும், ஊடக உலகின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது எனவும் அவர் தனது உரையை முடித்தார்.



