
மலேசியர்களின் மனதை கவர்ந்த “பசங்க” தொடர், தனது மூன்றாவது சீசனுடன் திரும்ப வர இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் டென்ஸ் குமார் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகத் தளத்தில் “Pasanga 3 #Raja coming soon” என அறிவித்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த முறை “பசங்க 3” மொத்தம் 228 எபிசோடுகளைக் கொண்ட மாபெரும் சீசனாக வெளிவரவுள்ளது. அஸ்ட்ரோ வின்ன்மீன் சேனல் வழியாக ஒளிபரப்பப்பட உள்ள இந்த தொடரை, விருதுகள் பெற்ற இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்குகிறார். தயாரிப்பில் டென்ஸ் குமார் – விமலா பெருமாள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

தொடரின் மையக்கதை மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களைச் சுற்றித்தான் அமைந்துள்ளது – ராஜா, ஜாகா, ஆனந்த். நகர வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், நட்பு, கனவுகள், குடும்பப் பாசம், போராட்டங்கள் போன்ற உணர்ச்சிகளை சுவாரஸ்யமாகக் கூறும் இந்த கதை, பார்வையாளர்களின் மனதில் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.
முந்தைய “பசங்க 2” தொடர் சாதனைபூர்வ வெற்றியைப் பெற்றது. 1.9 மில்லியன் பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் பார்த்ததுடன், 80 மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ் தெரியாத 30% பேரும் இந்த தொடரை ரசித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய சீசனில் டென்ஸ் குமார், ஆல்வின் மார்டின் சாந்தியாவூ, சசிகுமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களின் கதாப்பாத்திரங்களுடன் திரும்ப வருகிறார்கள். கூடவே மூன் நிலா, தாஷா கிருஷ்ணகுமார், நித்யாஶ்ரீ, சுசிலா தேவி, தேவகண்ணி, கபில் கணேசன், கேஷப் சூர்யா ஆகிய பலரும் இணைகிறார்கள்.
“பசங்க 3” – போராட்டம், காதல், மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு, உயர்தரமான கதையாடலும் காட்சியமைப்பும் கொண்டிருக்கும் என குழுவினர் உறுதியளித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர், மலேசிய தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத அடுத்த கட்டமாக அமைந்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா


