
கோலாலம்பூர், 12 நவ. – “நாம் எந்த அளவு நாள் பதவியில் இருப்போம் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் அந்த பதவியில் இருக்கும்போது மக்களுக்காக செய்வதே நம்மை வரலாற்றில் நிலைநிறுத்தும்,” என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “இந்த பிரிக்பீல்ட்ஸ் என் இருதயத்தோடு இணைந்த பகுதி. இதன் ஆரம்பநாட்களிலிருந்தே மக்களுடன் நான் இருந்தேன். அதனால்தான் இங்குள்ள மக்கள் என்னை இன்னும் தங்கள் ஒருவராகவே பார்க்கிறார்கள்,” என்றார்.

சரவணன் மேலும் கூறுகையில், “இப்பகுதியில் என் புகைப்படங்கள் அதிகமாக இருப்பதை சிலர் வினவுகிறார்கள். ஆனால் அது மக்களின் பாசத்தின் அடையாளம். வருடத்தில் ஒருமுறை மட்டுமே தீபாவளிக்காக வருவேன் என்றாலும், மக்களின் அன்பு மாறவில்லை,” என்றார்.
அவர் மேலும் வலியுறுத்துகையில், “பதவியில் இருக்கும் போது செய்யும் கடமைதான் நம்மை மக்களின் மனதில் நிலைநிறுத்தும். இன்று சிறிது பேசினால்கூட விசாரணை நடக்கிறது. எனினும், நான் எப்போதும் பிரிக்பீல்ட்ஸ் மக்களுக்காக பேசுவேன்,” என உறுதியுடன் கூறினார்.
-யாழினி வீரா



