
நெகிரி செம்பிலான், மே 8: நெகிரி செம்பிலானில் கட்டுப்பாடற்ற தெருநாய்கள் மூலம் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்க, அவை சட்டப்படி கருணையுடன் உயிரிழக்கச் செய்யப்படும் என மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்துள்ளார்.
“இந்த நடவடிக்கைகள் பொறுப்பற்றவையாகவோ, கண்மூடித்தனமாகவோ அல்ல. மனிதாபிமான அடிப்படையில், விலங்கு நல சட்டங்களை மதிக்கின்ற வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்,” என அவர் கூறினார்.
தெருநாய்கள் தொடர்பான பரவலான புகார்கள், மக்கள் மீது தாக்குதல், குடியிருப்புப் பகுதிகளில் தொந்தரவு மற்றும் சில முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் நுழைவது போன்ற சம்பவங்கள் அடிப்படையில், மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது.
இதற்கான அதிகாரம் ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மாநில சட்டமன்ற கூட்டத்தில், அரசு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த நடவடிக்கையை ஆதரித்தனர்.
இருப்பினும், சில அரசு சாரா அமைப்புகள் இந்த முடிவை விமர்சித்து, இது மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முரணானது என்று கண்டித்துள்ளன.
அமினுடின், “இது உணர்ச்சியற்ற முடிவல்ல; மக்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மை,” எனத் தெளிவுபடுத்தினார்.
-யாழினி வீரா