
மலேசிய சுகாதார அமைச்சின் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு (Pharmacy Enforcement Division) நடத்திய அதிரடி சோதனையில், சுமார் ரூ.3 மில்லியன் மதிப்புள்ள பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டின் பல இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனைகள் சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 402 வகையான பதிவு செய்யப்படாத மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பாலியல் திறன் ஊக்கி மாத்திரைகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள், ஸ்டீராய்டுகள் மற்றும் ஹார்மோன் சார்ந்த மருந்துகள் அடங்கும்.
சில மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாகவும், அவை மலேசியாவில் விற்பனை செய்யத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சோதனையின் போது சில கடைகளும் கிடங்குகளும் மூடப்பட்டன. சம்பந்தப்பட்ட நபர்கள் “சுகாதாரச் சட்டம் 1952” (Akta Ubat 1952) கீழ் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
மலேசிய சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, எந்த மருந்தையும் வாங்கும் முன் அதில் “MAL” பதிவு எண் மற்றும் ஹோலோகிராம் ஸ்டிக்கர் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஆன்லைன் தளங்கள் வழியாக விற்கப்படும் பதிவு செய்யப்படாத மருந்துகளைத் தவிர்க்குமாறும், சந்தேகமான விற்பனைகளை www.pharmacy.gov.my மூலமாகத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மருந்து பாதுகாப்பு என்பது நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முக்கிய அம்சம் என்பதால், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-யாழினி வீரா



