
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் வருகை தரும் என்பதால், சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் வழங்கப்படும் என்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 5ம் தேதி பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா பிப்ரவரி 14ம் தேதி தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். பிப்ரவரி 10ம் தேதி திருக்கல்யாணம், இரவில் வெள்ளி தர ஊர்வலம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச திருநாளில் தங்கத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர், பால், பன்னீர், வெல்லம், இளநீர் போன்ற பொருட்களால் காவடி எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆண்டுதோறும் 3 முதல் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தங்க குதிரை வாகன ஊர்வலம் மற்றும் பிப்ரவரி 14ம் தேதி தெப்ப உற்சவம் நடத்தப்படவுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், பக்தர்கள் கோவிலுக்கு எளிதாக வந்து செல்ல 10 நாட்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது, வழக்கத்திற்கு மாறாக மார்கழி மாதத்திலிருந்தே பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்து வருகின்றனர்.