
திருவண்ணாமலை, ஏப்ரல் 26 – 1980-களில் தமிழ் சினிமாவை தொடர்ந்து பல மொழிப் படங்களிலும் பிரபலமாக இருந்த நடிகை மற்றும் பரதநாட்டியக் கலைஞர் சுகன்யா, ஆன்மிக நிகழ்ச்சியில் பக்திச் சிறப்புடன் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில், ஸ்ரீ ரமண மகரிஷியின் 75ஆம் ஆண்டு ஆராதனை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சுகன்யா, முழுமனதுடன் பக்தியில் மூழ்கி ரமணருக்கான பாடல்களை பாடி ஆழ்ந்த பக்தியையும் இசை மீதான பாசத்தையும் வெளிப்படுத்தினார்.
பின்னர், ஆஸ்ரம வளாகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமும், தீப ஆராதனையும் நடத்தப்பட்டது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான சுகன்யா, முதல் படத்திலேயே ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து விருதுகளும் பெற்றவர். திரையுலகத்திற்கு அப்பாலும், இசை, நாட்டியம், ஆன்மிகம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர், பக்தியையும் கலையும் இணைத்த இந்த நிகழ்வில் தனது கலையை பக்திப் பூர்வமாக வெளிப்படுத்தினார்.