
கோலாலம்பூர், 2 செப்டம்பர் 2025 – சாரா உதவித் திட்டம் தொடங்கிய முதல் இரண்டு நாள்களில், நாடளவில் மொத்தம் RM110 மில்லியன் செலவிடப்படுள்ளது என நிதியமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகம் (MOF) வெளியிட்ட தகவலின்படி, நேற்றிரவு 9.30 மணி வரையிலும் 900,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் MyKad மூலமாக RM60 மில்லியனுக்கும் மேல் செலவிட்டுள்ளனர். மொத்தம் இரண்டு நாளில் 1.7 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பங்கேற்று, விற்பனை மதிப்பு RM110 மில்லியனை எட்டியுள்ளது.
மை காசே அறக்கட்டளை (MyKasih), அதிக பரிவர்த்தனைகளை சமாளிக்க கூடுதல் திறன் பெற்றிருந்தாலும், குறிப்பாக மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை பெருநகர சுப்பர் மார்க்கெட்டுகளில் சிறிய நெரிசல் பதிவாகியுள்ளது. இதனை சமாளிக்க, மைகாசிஹ் பணியாளர்கள் நேரடியாக சந்தைகளில் பணியமர்த்தப்பட்டு, உடனடி உதவியும் விற்பனையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆதரவும் வழங்கியுள்ளனர்.
அமைச்சகம், பொதுமக்கள் பரபரப்பு நேரங்களை தவிர்த்து, வேலை நாட்களின் காலை நேரங்களில் வாங்குவதால் அதிக வசதி கிடைக்கும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பயனாளர்களுக்கான RM100 மதிப்பிலான கிரெடிட் 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். நாடு முழுவதும் 7,300-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கடைகளில் இதனை பயன்படுத்தலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா



