Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

WHO, பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ‘குட்பை’ – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடிகள்!

வாஷிங்டன், 21 ஜனவரி — உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். முதல் நாளில் அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளும், வெளியிட்ட அறிவிப்புகளும் கவனம் ஈர்த்துள்ளன.

78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக பதவியேற்றார். ‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது’ என அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய தனது முதல் உரையில் தெரிவித்தார். அதற்காகவே கடவுள் தனது உயிரை காத்துள்ளார் என தனது உணர்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

கடந்த 2021-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது போலீஸ் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இந்நிலையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான சுமார் 1,600 பேருக்கு மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார். முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் அமல் செய்யப்பட்ட சுமார் 78 நடவடிக்கைகளை புதிய அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார். அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்கள் தாமதப்படுத்தும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 1-ம் தேதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டும் அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top