
கோலாலம்பூர், 8 பிப்ரவரி — வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, வெள்ளி இரத ஊர்வலத்திற்காக கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டம் கட்டமாக மூடப்படவுள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா வெளியிட்ட அறிக்கையின்படி, ஜாலான் துன் எச்.எஸ் லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் வெள்ளி இரதம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை நோக்கி செல்கிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு, ஊர்வல பாதையில் உள்ள முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.
மூடப்படும் முக்கிய சாலைகள்:
- ஜாலான் துன் எச்.எஸ் லீ
- ஜாலான் சுல்தான்
- ஜாலான் துன் டான் செங் லோக்
- ஜாலான் புடூ
- ஜாலான் துன் பேராக்
- ஜாலான் லெபோ அம்பாங்
- ஜாலான் அம்பாங்
- ஜாலான் முன்ஷி அப்துல்லா
- ஜாலான் டாங் வங்கி
அத்துடன், ஜாலான் ராஜா லாவூட், ஜாலான் பெலியா, ஜாலான் ஶ்ரீ அமார், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, ஜாலான் துன் ரசாக், ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் ஈப்போ லாமா மற்றும் ஜாலான் கெப்போங் பாரு ஆகிய முக்கிய வீதிகளும் பகுதி பகுதியாக மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்படும்.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வழக்கமாக சாலைகளை பயன்படுத்துவோர் தங்கள் பயணங்களை முறையாக திட்டமிடுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி தேவையற்ற தடைகளைத் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தைப்பூச உற்சவம் மற்றும் இரத ஊர்வலம் வழக்கமாக பெரும் திரளான பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். எனவே, பொது மக்கள் இதை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
-வீரா இளங்கோவன்