
கோலாலம்பூர், 31 ஜனவரி — மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஆராய்ந்து, மலேசியர்கள் வேலைவாய்ப்பில் நிலைத்திருக்க தேவையான பரிந்துரைகளை வழங்கும். “தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைகள் பாதிக்கப்படும் என்ற கவலை சிலருக்கு இருக்கலாம். ஆனால் MADANI அரசு வேலைவாய்ப்பை முக்கியத்துவத்துடன் கருதுகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தினாலும், வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த மாதம் தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) வேலைகளுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்யுமாறு அமைச்சகத்திடம் உத்தரவிட்டதாக கோபிந்த் கூறினார். இதன் அடிப்படையில், NAIO தொழில்நுட்ப மாற்றத்தால் பாதிக்கப்படும் தொழில்கள் குறித்து ஆய்வு செய்து, பணி நஷ்டத்தை தடுக்கும் தீர்வுகளை முன்வைக்கும்.
டேலன்ட்கார்ப் (TalentCorp) கடந்த நவம்பர் 2024 வெளியிட்ட “மலேசிய தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரத்தின் தாக்கம்” ஆய்வை மேற்கோளிட்டு, வளரக்கூடிய தொழில்நுட்ப துறைகள் மற்றும் வேலைவாய்ப்பின் நிலை குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.
தொழில்நுட்ப மாற்றத்தால் பாதிக்கப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் துறைகளை இனங்கண்டு, வேலைவாய்ப்பு நிலைமை உறுதியாக இருக்க திறன் மேம்பாடு (upskill, reskill) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12 தொடங்கப்பட்ட NAIO, மலேசியாவை AI துறையில் முன்மாதிரியாக உருவாக்க அமைக்கப்பட்ட மையமாக செயல்படும்.
-யாழினி வீரா