
ஷா ஆலாம், 31 ஜனவரி –மலேசியாவில் பண மோசடி கும்பலின் சேர்ந்தவர்களை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் பணமோசடி முற்றிலும் முடக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் ஒரு வியட்நாமிய பெண்ணும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சோதனையில், நான்கு மலேசிய ஆண்கள், ஒரு மலேசிய பெண் மற்றும் ஒரு வியட்நாமிய பெண் ஆகிய ஆறு பேரை கைது செய்ததாக தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் என்றும், முறைகேடான வழிகளில் பெற்று வரும் தொகையை தினமும் RM200,000 வரை ஏ.டி.எம் கார்டுகளின் மூலம் பணமாக மாற்றியதாக கூறினார்.
“இந்த பணம் மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது” என்று அவர் இன்று (ஜனவரி 31) மாநில போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
போலீசார் 10 கைபேசிகள், RM200,000 பணம் மற்றும் 122 ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். “சந்தேகநபர்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் வழியாக பணியாளர்களிடமிருந்து ஏ.டி.எம் கார்டுகளை பெற்று, கிளாங்க் பள்ளத்தாக்கில் உள்ள வங்கிகளிலிருந்து பணத்தை எடுத்தனர். தினசரி RM200,000 இலக்கை அடைந்தவுடன், அந்த பணத்தை மீண்டும் இடைத்தரகர்களிடம் கொடுத்தனர்,” என்று போலீஸ் தலைவர் விளக்கம் அளித்தார்.
மேலும், மோசடி பணத்தால் டிஜிட்டல் நாணயங்களை வாங்கவும், மற்ற மோசடிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். “பேங்க் கணக்கு வழங்கிய நபர்களையும் (மியூல் கணக்கு வைத்தவர்களை) விசாரணை செய்து வருகிறோம். திருத்தப்பட்ட பெனல் கோடு பிரிவு 424B அடிப்படையில், அவர்களும் கடுமையான சட்ட நடவடிக்கைக்குள் வரலாம்,” என்று அவர் எச்சரித்தார்.
-வீரா இளங்கோவன்