Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசியா 13வது திட்ட வரைவு: இந்திய சமூக மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் பிரசுரம்

Picture: Veera

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: மலேசியாவின் 13வது தேசிய திட்ட வரைவை இந்திய சமூகத்தின் பார்வையில் விளக்கும் நிகழ்வு, இல்திஸாம் அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் கருப்பையாவின் வரவேற்புரையுடன் துவங்கியது.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக, இந்தியர்களின் சமூக முன்னேற்றத்திற்காக சுமார் 200 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் வழங்கிய பரிந்துரைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 11 முக்கியக் கருத்துகளை 5 மேம்பாட்டு திட்டத் தொகுப்புகளாக அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களின் சமீபத்திய பழக்கவழக்கங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், சமூக நலத்திற்காக தங்களைக் அர்ப்பணித்த தலைவர்களுக்கு விடை கொடுப்பதை விட, குற்றவாளிகளின் மரணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்கள் குறித்து கவலை வெளியிட்டார். இது இளைய சமுதாயத்தின் மாற்றம் பெற்ற ரசனையை காட்டுவதாகவும், இந்தத் திருப்பத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது என்பதாகவும் அவர் கூறினார்.

கல்வி முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ள இந்தத் திட்டத்தில், கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, பெற்றோர், சமுதாயம் மற்றும் அரசாங்கம் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டியதைக் கூறுகிறது. சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களால் செயலிழந்துகொண்டும், போக்குவரத்து கட்டண சுமையாலும் பள்ளி விடுபட நேரிடும் பிரச்சினைகளுக்கு மாற்று வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தொழில்களுக்கு ஏற்ற வகையில் திவேட் பயிற்சி வழியாக வருடத்திற்கு 5,000 இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி மற்றும் ஊதிய உயர்வை ஏற்படுத்தும் முயற்சிகளும் இதில் அடங்கும்.

அதேபோல், இந்திய நகர்ப்புற ஏழைகள், வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துக்கான அணுகலை மேம்படுத்துவது, கலாச்சாரம் மற்றும் குடிமக்கள் பங்களிப்பை வலுப்படுத்துவது போன்ற முன்முயற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த திட்டமானது எல்லா சமூகங்களும் சமமாக வளர வேண்டும் என்பதற்கான வலியுறுத்தலாக செயல்படுவதாக, சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top