
கோலாலம்பூர், 18 பிப்ரவரி — கோலாலம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற அனுகெரா ஜுவாரா லாகு (Anugerah Juara Lagu) 39 விருது வழங்கும் விழாவில், ஆண் விருந்தினர்கள் பெண்களின் உடையில் தோன்றியது சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த TV3, குறித்த சம்பவத்தால் மக்களிடையே ஏற்பட்ட மனஅழுத்தத்திற்கு வருந்துவதாக இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“நாங்கள் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளோம். இது சமூகத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளதை உணர்கிறோம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என TV3 தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் அந்த ஆண் விருந்தினர்கள் பெண்களின் உடையில் தோன்றியது தொடர்பாக சிலாங்கூர் மாநிலத்தின் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் எக்ஸ்கோ, முகமட் நஜ்வான் ஹலிமி கடுமையாக விமர்சித்தார். “இது மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான செயல்” என அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், இது LGBT (லெஸ்பியன், கெய், பய்செக்சுவல், டிரான்ஸ்ஜெண்டர்) கலாச்சாரத்துக்கு ஆதரவளிக்க முயற்சி செய்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து மலேசிய இஸ்லாமிய முன்னேற்றத் துறை (JAKIM) மலேசிய தகவல், தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தலையிட வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்த சூழ்நிலையில், TV3 நிறுவனம் மலேசிய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம் என்றும், குறித்த ஆண்கள் பெண்கள் போன்று உடை அணிவதை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
“இது மலேசிய சமூகத்தின் மரபுகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிராக இருக்கிறது. மேலும், இது அரசின் விதிமுறைகளை மீறுவதாகும்,” என TV3 நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வழக்கை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் திரும்ப நேராமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் TV3 உறுதியளித்துள்ளது.
-வீரா இளங்கோவன்