Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழா

படம்: லேஷார்ம் பிரபாகரன்

கோலாலங்காட், 21 ஜூன்: தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை நோக்கம் பெற்றோர்களின் பங்கு, தியாகம் மற்றும் சமுதாயத்திற்கான அர்ப்பணிப்பை மக்களிடம் எடுத்துரைப்பதோடு, குடும்பம் என்ற அடிப்படையில் மனித நேயமும் ஒற்றுமையும் பரவுவதை ஊக்குவித்தலாகும்.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மூத்த அந்தரங்க செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், சிஜாங்காங் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோலாலங்காட் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ சுரிஹான் பின் யூசோப், ஐ.பி.எப் தேசியப் பொதுச் செயலாளர் திரு. மோகன் முனுசாமி, பி.கே.ஆர் கோலாலங்காட் தொகுதி துணைத்தலைவர் திரு. பன்னிர்செல்வம் சிறப்பு விருந்தினாக கலந்துக்கொண்டனர்.

இன்றைய சமுதாயத்தில் நல்லொழுக்கங்கள் மற்றும் மரியாதை மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, இளைஞர்களும் பிள்ளைகளும் தங்களது பெற்றோர்களை மதித்து, அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பெற்றோர் தங்களது வாழ்க்கையை முழுமையாகக் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அந்த பாசத்திற்கும் தியாகத்திற்கும் பிள்ளைகள் மதிப்பளிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. நாம் எந்தளவுக்கு முன்னேறினாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றியைப் பெற முடியாது. பெற்றோரின் அனுபவங்களை மதித்து, அவர்களிடம் கனிவாக பேசும் பண்பும், அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் முயற்சியும் இன்றைய தலைமுறையிலுள்ள அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தேசியத் தளபதி நற்பணி மன்றத்தின் தலைவரும் ஐ.பி.எப் கோலாலங்காட் தொகுதித் தலைவருமான டத்தோ பாஸ்கரன் அவர்கள் தமதுரையில் வலியுறுத்தினார்.

சிஜாங்காங் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோலாலங்காட் அம்னோ (UMNO) தொகுதித் தலைவர் டத்தோ சுரிஹான் பின் யூசோப் விழாவில் உரையாற்றிய போது, பெற்றோர்களின் பெருமை மற்றும் அவர்கள் செய்யும் தியாகங்களைப் பற்றி பெருமையாகக் கூறினார்.

“இந்த நாள், தாய் மற்றும் தந்தையரை போற்றும் ஒரு சிறப்பு நாளாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக செய்யும் பணிகள், தியாகங்கள் மற்றும் பாடுகளுக்கு நம் சமுதாயம் நன்றி செலுத்த வேண்டிய ஒரு நாளாக இது அமைகிறது,” என்றார் அவர்.

“ஒரு குழந்தையின் வாழ்க்கைத் தொடக்கம் முதல் வெற்றியின் உச்சம் வரை, பெற்றோர் இடைவிடாது அன்பும் வழிகாட்டலும் வழங்குகின்றனர். அவர்கள் தங்களது சொந்த தேவைகளைப் புறக்கணித்து, பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள். எனவே, அவர்களது தியாகங்களை நினைவுகூர்வது நமது கடமையாகும்,” என அவர் உணர்வுபூர்வமாகக் கூறினார்.

மேலும், “பெற்றோர்கள் ஒரே நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்கள் இல்லையென்றால் நாம் இன்றைய நிலைக்கு வர முடியாது. அவர்களுக்கு நன்றி கூறும் வார்த்தைகள் போதாது, நாம் நம் வாழ்கையில் நல்லொழுக்கம், மரியாதை, அன்பு ஆகியவற்றை நடமாடச் செய்து அவர்களுக்கு உண்மையான மரியாதையை காட்ட வேண்டும்,” என்று டத்தோ சுரிஹான் வலியுறுத்தினார்.

விழாவின் முக்கிய அம்சமாக, வந்திருந்த தந்தையர்களுக்கு வேட்டிகளும் அன்னையர்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இது பெற்றோர்களின் பங்களிப்பை மதிக்கும் ஒரு நினைவாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில், இம்மாதிரியான அன்பளிப்புகள் குடும்ப உறவுகளின் பாசத்தை வலுப்படுத்தும் சிறந்த முயற்சியாகவும் திகழ்ந்தன.

நிகழ்வின் இறுதியில், அறுசுவை விருந்துடன் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தோடு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். சமூக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழா, வேரோடு பயிர்ந்த பாரம்பரியத்தை மீளப் புகட்டும் முயற்சியாகவும், பெற்றோருக்கான நன்றியுணர்வை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. விழாவைத் தொடர்ந்த விருந்தினர் கருத்துக்கள், இந்த மாதிரியான விழாக்கள் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தின.

இந்த நிகழ்வு நமது சமூகத்தில் பெற்றோர்களுக்கான மரியாதையை எழுச்சி கூடிய வகையில் மக்களின் மனங்களில் பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-யாழினி வீரா

Scroll to Top