Tazhal Media – தழல் மீடியா

/ Apr 15, 2025
Latest News
tms

Waze-ஐ நம்பி தவறான பாதையில் சிக்கிய முதியவர் மீட்பு

Picture:  Ihsan Jurasmadi Pauzi

பகாங் மாநிலத்தின் பெந்தா பகுதியில் உள்ள வெறிச்சோடிய பனைமரத் தோட்டத்தில், Waze செயலியின் வழிகாட்டலின்படி பயணித்த 70 வயதுடைய பாஉஸி இஸ்மாயில் என்ற முதியவர், 4 மணி நேரம் சிக்கிக்கொண்ட பிறகு, உள்ளூர் கிராமத்தவரால் மீட்கப்பட்டார்.

கிளந்தான் மாநிலம் குவா முஸாங் பகுதியில் இருந்த தனது உறவினரை மருத்துவமனையில் பார்க்கச் சென்ற இவர், ஜோகூர் மாநிலம் பந்தார் பெனாவார் திரும்பும்போது வாகன நெரிசலைத் தவிர்க்க Waze செயலியை பயன்படுத்தினார். ஆனால் அந்த செயலி, அவரை பழமையான எண்ணெய்ப் பனை தோட்டத்துக்குள் வழிநடத்தியது. ஈஸ்வரா ரக காரில் வந்திருந்த அவர் சதுப்புநிலத்தில் சிக்கி, இருட்டாகும் நேரத்தில் உதவி தேட வேண்டிய நிலைக்கு வந்தார்.

அவரின் மகன் ஜுராச்மாடி பாஉஸி, குடும்பம் இரு வாகனங்களில் பயணித்ததாகவும், தந்தை தனியாக காரில் சென்றதாகவும் கூறினார். இரவில் பகாங் தீயணைப்பு துறையிடம் இருந்து வந்த அழைப்பின் மூலம் தந்தை தவறாகச் சென்று விட்டதை அறிந்தனர்.

தந்தையின் இருப்பிடத்தை கண்டறிய பலமுறை முயற்சி செய்தபோதும், அவர் தொழில்நுட்பத்தில் அனுபவமில்லாத காரணத்தால் தன் இருப்பிடத்தை பகிர முடியவில்லை. கடைசியாக அவர் 999 அவசர எண்ணுக்கு அழைத்ததன் மூலம் மீட்பு முயற்சி தொடங்கப்பட்டது.

பின்னர், சில கிராமவாசிகள் புகைப்படத்தின் அடிப்படையில் பழைய பனை மரங்கள் உள்ள இடத்தை அடையாளம் காண, தோட்டத்துக்குள் சென்று அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

-யாழினி வீரா

Scroll to Top