
கோலாலம்பூர், 9 மார்ச் — மலேசியாவின் தேசிய வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு போதிய கவனமும், அதிக வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். குறிப்பாக கொள்கை உருவாக்கும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாக இருப்பதால், அரசாங்கம் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் உள்ள உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர், “ஒவ்வொரு அமைச்சும், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM) உடன் இணைந்து, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களில் தீவிரமாக செயல்பட வேண்டும். அரசு துறைகளில் பெண்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பல பெண்கள் தகுதியான பதவிகளில் சாதனை புரிந்துள்ளனர். எனவே, பெண்களின் திறமையை மதித்து, அவர்களுக்கு மேல்நிலையிற்கான வாய்ப்புகளை வழங்குவது அவசியம்,” என்று அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும், “JUSA எனப்படும் மலேசியாவின் முதன்மை பொது துறை பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை தற்போது 30% உயர்ந்துள்ளது. ஆனால் இதை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேசிய தலைமைச் செயலாளரை, பெண்கள் உயர் பதவிகளை பெறுவதற்கான நடைமுறைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த உரை, மலேசிய அரசாங்கம் பெண்கள் அதிகாரமளிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க உறுதியாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.
-யாழினி வீரா