
படம் : கூகுள்
புதுடெல்லி, 25 பிப்ரவரி– அந்நிய நேரடி முதலீட்டு மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை பிபிசி நிறுவனம் தயாரித்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை இந்தியாவில் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி இந்தியா நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
பிறகு, அந்நிய நேரடி முதலீட்டை பிபிசி இந்தியா நிறுவனம் 26 சதவீதமாக குறைக்கவில்லை என்றும், இது இந்திய சட்டத்தின் படி விதிமுறை மீறல் எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த விதிமுறை மீறலுக்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த அபராதமாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் 3 இயக்குநர்களுக்கும் தலா ரூ.1.14 கோடி அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது.
– ஶ்ரீஷா கங்காதரன்