
கோலாலம்பூர், 7 நவ. – மலேசிய வானிலைத் துறை (MetMalaysia) இன்று வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், நாட்டின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
அந்த எச்சரிக்கை பெர்லிஸ், கெதாக், புலாவ் பினாங், பெராக், செலாங்கூர், கோலாலம்பூர், புத்த்ராஜயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த சில பகுதிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெராக் மாநிலத்தில் கீரியான், லருட், மாதங் & செலமா, ஹுலு பெராக், குவாலா கங்க்சார், கிண்டா, மன்ஜங், கம்பார் மற்றும் ஹிலிர் பெராக் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல், செலாங்கூரில் சபாக் பெர்ணாம், கிளாங்க், பெத்தலிங், குவாலா லங்காட், ஹுலு லங்காட் மற்றும் செபாங் போன்ற பகுதிகளும் பாதிக்கப்படலாம் என MetMalaysia தெரிவித்துள்ளது.
அமைப்பு பொதுமக்களுக்கு வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்க்கவும், திறந்த இடங்களில் தங்காமல் பாதுகாப்பான இடங்களில் இருப்பதற்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மின்னல் தாக்கத்திலிருந்து தற்காப்பு எடுக்க மின்சார சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
MetMalaysia, புதிய வானிலைத் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை தமது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ச்சியாக வெளியிடும் என தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா



