
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — 2025 கல்வியாண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதல் முதலாக தொடங்கும் மாணவர்களை மஇகா சார்பில் வாழ்த்தி வரவேற்பதாக அதன் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளிகள் நம் சமுதாயத்தின் கலாச்சார, பாரம்பரிய அடையாளமாக திகழ்கின்றன. இதை மனதில் கொண்டு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்ததற்கும், அவர்களுக்கு சிறந்த கல்வி அடித்தளத்தை அமைக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கும், தமிழ்ப் பள்ளி நிலை உயர்வுக்காக பாடுபடும் சமூக அமைப்புகளுக்கும் மஇகா தனது நன்றியை தெரிவிக்கிறது.
மலேசிய இந்தியர்களுக்காக தமிழ்ப் பள்ளிகளைத் தாங்கி நிற்கும் ஒரே இயக்கம் மஇகா என்பதைக் கண்டிப்பாக கூறலாம். பள்ளிகளின் பாதுகாப்பு, அபிவிருத்தி, புதிய பள்ளிகளின் கட்டுமானம் உள்ளிட்டவை தொடர்பாக மஇகா தொடர்ந்து முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசாங்க மானியங்கள் உள்ளிட்ட வசதிகளை பெற்றுத் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2025ஆம் கல்வியாண்டில் புதிதாக தமிழ்ப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என மஇகா வாழ்த்துகிறது. இடைநிலைப் பள்ளிக்கு செல்வோர்களும், புதிய சூழலில் தங்களை ஏற்ப்படுத்தி, உயர்கல்விக்கு தகுதிபெறும் வரை தங்களின் கல்விப் பயணத்தை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
மஇகா கல்வி நிறுவனம் (MIIT) உயர்கல்விக்காக எப்போதும் தயாராக இருக்கும் என்றும், நம் மாணவர்கள் அனைவரும் பட்டதாரியாகி, ஒளிமிகுந்த எதிர்காலம் அமைத்துக்கொள்ள கல்வியை முதன்மையாகக் கருத வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-யாழினி வீரா