
சுபாங் ஜெயா, 8 ஏப்ரல்: பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் (PGB) வெளியிட்டுள்ள அறிவிப்பில், புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து, மத்திய மண்டலத்தில் உள்ள குழாய் சேவைகளை பாதித்துள்ளதாக தெரிவித்தது.
இந்த பாதிப்பு, ஷா ஆலாம், கிள்ளான், புச்சோங் மற்றும் பத்து தீகா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளதோடு, நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மொத்த எரிவாயு விநியோக வாக்குறுதியின் சுமார் 7% அளவை பாதித்துள்ளது.
சேவைகள் முழுமையாக மீளச் செய்யப்படும் வரை, PGB அதிகாரப்பூர்வமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழாய் சேவைகளை சீராக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தச் சம்பவத்தால் ஏற்படும் முழுமையான நிதி பாதிப்புகள் குறித்து நிறுவனத்தால் தற்போது கூற இயலாது என்றும், அதற்கான விசாரணைகள் மே 2025இல் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் PGB புர்சா மலேசியாவிற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா