
பாரிட், 18 பிப்ரவரி — நேற்று பேராக் மாநிலம், பாரிட் அருகே உள்ள கம்போங் தெர்புஸ் பகுதியில் சுங்கை பேராக் ஆற்றில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது இரண்டு வாலிபர்களை தேடும் நடவடிக்கை இன்று 5 கிலோமீட்டர் வரையிலான பரப்பிற்கு விரிவாக்கப்படவுள்ளது.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயற்பாட்டு உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அகமட், இந்த தேடுதல் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டதாகவும், இதில் 25-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார். தேடுதல் பணியில் பந்தாய் ரெமிஸ், பங்கோர், செரி இஸ்கண்டார் மற்றும் கோல கங்சார் சேர்ந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
“சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து தேடுதல் தொடங்கப்பட்டுள்ளது. பங்கோர் தீயணைப்பு நிலையத்திலிருந்து பாசி (K9) நாய்கள் பிரிவு மற்றும் நீர் மீட்பு குழுவும் (PPDA) அனுப்பப்பட்டுள்ளன. ஆற்றின் கீழ்திசை நோக்கி நகரும் போது, அலுமினியம் படகுகளையும், கிராம மக்கள் வழங்கிய படகுகளின் உதவியையும் பயன்படுத்தி தேடுதல் நடத்தவிருக்கின்றோம்,” என்று அவர் தகவலில் குறிப்பிட்டார்.
நேற்று JBPM வெளியிட்ட அறிவிப்பின்படி, சுல்தான் முகம்மது ஷா இடைநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள், ஆற்றில் தவறி விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. பொதுமக்கள் இந்த சம்பவத்தை மாலை 4.21 மணியளவில் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
தற்போது நிலவும் மேகமூட்டமான வானிலை மற்றும் ஆற்றின் வலுவான நீரோட்டம் தேடுதலுக்கு சவாலாக இருக்கலாம் என சபரோட்சி தெரிவித்தார். “எந்த முடிவையும் முன்பே கணிக்க முடியாது. ஆனால், நம்மிடம் உள்ள திறமையும், கிராம மக்கள் வழங்கும் உதவியுடனும் இந்த நடவடிக்கை வெற்றியாக அமையும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
-யாழினி வீரா