
picture:awani
பாங்காக், மே 19:
தாய்லாந்தின் பிரபல இசைத் தயாரிப்பாளரும் டிஜேவுமான மாயாட், அவரது வீட்டில் தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இசை உலகத்தையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாயாட் (வயது 36), தாய்லாந்தின் இசைத் துறையில் முக்கியமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவர். பல்வேறு மேடைகளில் அவரின் லைவ் டிஜே நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. கடந்த சில நாட்களாக அவரை தொடர்புகொள முடியவில்லை என்கிற புகாரை அடுத்து, அவரது பாங்காக் நகரிலுள்ள வீட்டிற்கு சென்ற போலீசார், வீட்டின் மாடிப்பகுதியில் அவர் சடலமாக கிடப்பதைக் கண்டனர்.
அவரது தலையில் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டது. அருகில் ஒரு துப்பாக்கியும் கிடந்தது. இது தற்கொலை எனத் தொடக்கத்திலேயே போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவ இடத்தில் சில விசித்திரமான சூழ்நிலைகள் காணப்பட்டதாகவும், இது வெறும் தற்கொலை அல்லாமலும் இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாயாட் சமீப காலங்களில் தனிப்பட்ட பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருந்ததாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அவர் ஒரு திட்டமிட்ட இசை நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது மரணம் சூழ்ச்சிக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
மாயாடின் மறைவு தாய்லாந்து மட்டுமின்றி, சர்வதேச இசை உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது இசையை நினைவுகூர்ந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த மர்மமான மரணம் தொடர்பாக தாய்லாந்து போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள், கைரேகைகள் மற்றும் அவரது மெசேஜ்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன. இறுதிக் காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், பலரது வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்