
சென்னை, செப். 23 – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சென்னை ஒன்’ எனும் புதுமையான செயலி நேற்று அறிமுகமானது. இந்தியாவில் இத்தகைய முதல் முயற்சியாக கருதப்படும் இந்த செயலியை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கியுள்ளது.
‘சென்னை ஒன்’ செயலி மூலம் பயணிகள் புறப்படும் இடத்தையும், சென்றடைய வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு ஒரே பயணச்சீட்டை பெறலாம். அந்தச் சீட்டின் மூலம் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வசதி கிடைக்கிறது. தற்போது இந்த மூன்று போக்குவரத்துச் சேவைகளை தினமும் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
முந்தைய காலங்களில் தனித்தனியாக சீட்டுகள் வாங்க வேண்டிய நிலையில், இச்செயலி அறிமுகமாகியுள்ளதால் பயணிகளுக்கு பெரும் எளிமை கிடைக்கப்போகிறது. மேலும், ஒரே மின்னிலக்கத் தளத்தில் பல்வேறு சேவை வழங்குநர்களை இணைக்கும் வசதி இருப்பதால், எதிர்காலத்தில் ‘நம்ம யாத்ரி’ ஆட்டோ மற்றும் வாடகைக் கார் சேவைகளும் இணைக்கப்படவுள்ளன.
பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய அனுபவத்தை வழங்கும் ‘சென்னை ஒன்’ செயலி, மக்களின் அன்றாடப் பயணத்தை வசதியாகவும், வேகமாகவும், குறைந்த செலவில் மாற்றும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-ஸ்ரீ



