
கோலாலம்பூர், 31 ஜனவரி — அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. அருகே உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் நிகழ்ந்த பரிதாபகரமான விமான விபத்து குறித்து மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த துயரத்தை வெளியிட்டுள்ளார்.
தனது Facebook பதிவு மூலம் அவர், இந்தச் சம்பவத்தில் பல பிரபல இளம் பனிச்சறுக்கல் (figure skating) வீரர்களை இழந்தது மிகுந்த வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிலிப்பின்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் துயரத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இந்த கடினமான தருணத்தில், மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அன்வார் தெரிவித்தார். இழந்த குடும்பங்கள் தங்களது துயரத்தை சமாளிக்க தேவையான மனவலிமையையும் ஆறுதலையும் பெற வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஊடகக் கணிக்கைகளின்படி, அமெரிக்க அதிகாரிகள் இந்த வான்வழிப் பேரழிவில் உயிர் தப்பியவர்கள் யாரும் இல்லை எனக் கருதுகின்றனர். வாணிக விமானம் ஒன்றும் (64 பயணிகளுடன்) இராணுவ ஹெலிகாப்டரொன்றும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 14 இளம் அமெரிக்க பனிச்சறுக்கல் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ரஷ்ய பயிற்சியாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் American Airlines பயணிகள் விமானமும், Black Hawk ராணுவ ஹெலிகாப்டரும் முற்றிலும் சேதமடைந்தன.
-யாழினி வீரா